×

19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருவண்ணாமலை – சென்னை பீச் தினசரி ரயில் தொடங்கியது: ‘அரோகரா’ முழக்கத்துடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை- சென்னை பீச் ஸ்டேஷன் இடையே 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தினசரி பாசஞ்சர் ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. நினைக்க முக்தித்தரும் ஆன்மிக திருநகரம் திருவண்ணாமலை. பஞ்ச பூத தலங்களில் அக்னித் தலமக அமைந்திருக்கும் அண்ணாமலையார் திருக்கோயிலை தரிசிக்கவும், மலையே மகேசன் திருவடிவம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். ஆனாலும், திருவண்ணாமலை நகருக்கு தேவையான அளவில் ரயில் போக்குவரத்து சேவை இல்லாத குறைபாடு நீண்டகாலமாக உள்ளது.

குறிப்பாக, திருவண்ணாமலை வழியாக வேலூர்- விழுப்புரம் இடையே அகல ரயில் பாதை அமைந்த பிறகும், போதுமான ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் திருவண்ணாமலையில் இருந்து கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயக்கப்பட்ட திருவண்ணாமலை- சென்ைன நேரடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் கோரிக்கை வைத்திருந்தனர். இது தொடர்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக எம்பி சி.என்.அண்ணாதுரை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து வேலூர் கண்ட்டோன்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் பயணிகள் ரயிலை, தினமும் திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு உன் திடீரென இந்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்றது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட அறிவிப்பை திரும்பப்பெறுவதாக அறிவித்த தெற்கு ரயில்வே, திட்டமிட்டபடி உரிய கால அட்டவணைப்படி ரயில் இயக்கப்படும் என தெரிவித்தது.

அதன்படி, சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு புறப்பட்ட தினசரி பாசஞ்சர் ரயில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலையில் இருந்து தனது முதல் பயணத்தை நேற்று அதிகாலை 4 மணிக்கு பயணிகள் ரயில் தொடங்கியது. அதையொட்டி, திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் வியாபாரிகள் சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி முழக்கமிட்டு ரயில் மீது மலர்களை தூவி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். 19 ஆண்டுகளுக்கு பின் சேவை தொடங்கப்பட்டதை ஒட்டி பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில், ரயில் சேவை இயக்கம் தொடர்பான முரண்பட்ட அறிவிப்புகள் காரணமாக, நேற்று காலை முதல் பயணத்தில் குறைவான பயணிகளே பயணித்தனர். இனிவரும் நாட்களில் இந்த ரயில் சேவைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், மாதிமங்கலம், ஆரணி ரோடு (களம்பூர்), சேதரம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் பென்னாத்தூர், வேலூர் கண்ட்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்கிறது. திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரூ.50 மட்டுமே கட்டணமாகும். எனவே, திருவண்ணாமலையில் இருந்து வேலூர், காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழித்தடத்தில் செல்லும் பயணிகளுக்கும் இந்த ரயில் சேவை மிகவும் உதவியாக அமைந்திருக்கிறது.

The post 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருவண்ணாமலை – சென்னை பீச் தினசரி ரயில் தொடங்கியது: ‘அரோகரா’ முழக்கத்துடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Chennai Beach ,Chennai Beach Station ,Thiruvannamalai ,Annamalaiyar Temple ,Pancha Botha ,Agni Thalamaka ,
× RELATED சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே...